Monday, 26 August 2013

பாரம்பரிய எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்:
  1. எள்ளு - 1 கப் 
  2. வேர்கடலை - 1 கப் 
  3. கேழ்வரகுமாவு - 1 கப் 
  4. வெல்லம் - 1 கப் 
செய்முறை: 
  1. முதலில் எள்ளை வறுத்து போடி செய்து கொள்ளவும்.
  2. பின் வேர்கடலையை வறுத்துத் தோலை நீக்கி சின்ன சின்னதாக பொடித்துக் கொள்ளவும்.
  3. கேழ்வரகு மாவை தண்ணீர் உப்பு போட்டு பிசைந்து உருண்டை செய்து தட்டி தோசை கல்லில் அடை செய்து, பின் அதை துண்டு துண்டாக புட்டு வைத்துக் கொள்ளவும்.
  4. வெல்லத்தை போடி செய்துக் கொள்ளவும்.
  5. மிக்சியில் எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றை தனித்தனியாக பொடித்துக் கொள்ளவும்.
  6. பிறகு மிக்சியில் அரைத்து வைத்த எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றோடு வெல்லத்தையும் போட்டு மீண்டும் மிக்சியில் லேசாக விட்டுவிட்டு அரைத்தால் எல்லாம் ஒன்றாகக் கலந்து விடும்.
  7. இதனை எடுத்து ஒன்றாகக் கிளறி லட்டு போல் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
 எள்ளு உருண்டை தயார் !!!

Sunday, 25 August 2013

விநாயகர் சதுர்த்தி வெல்லம் பிடிக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. தேங்காய் - 1 கப்
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. தண்ணீர் - 1 கப்
  7. பால் - 1 கரண்டி
கொழுக்கட்டை செய்முறை:
  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
  2. இது ஆறியபின் இதில் பால், அரிசி மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து பிசைந்துக் கொள்ளவும்.
  3. இவற்றை ஒரு கைப்பிடி அளுவுக்கு நன்றாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. இவற்றை ஒரு  இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.
  2. கொழுக்கட்டையை  பிடிப்பதற்கு தண்ணிர் பற்றவில்லை என்றால் காச்சிய பாலை ஊற்றி கலந்து பிசைந்துக்கொள்ளவும்.
  3. தண்ணிர் அதிகமாகி விட்டால் அரிசி மாவு தேவையான அளவு போட்டு பிசைந்துக்கொள்ளலாம்.

Saturday, 24 August 2013

விநாயகர் சதுர்த்தி எள்ளு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. எள்ளு - 1கப் (வறுத்துப் பொடித்தது)
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 1 ஸ்பூன் 
  7. எண்ணெய் - 1 ஸ்பூன்
  8. தண்ணீர் - 1 கப்
  9. பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைப்பட்டால் 
  10. பால் - 1 கரண்டி
பூரணம் செய்முறை:
  1. ஒரு கடாயில் அடுப்பில் வைத்து வெல்லம், சர்க்கரை, எள்ளு, ஏலக்காய், நெய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
கொழுக்கட்டை செய்முறை:
  1. பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கரண்டி பால், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
  2. கிளறிவைத்த அரிசி மாவை நன்றாகக் கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
  3. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
  4. இதன்மேல் செய்துவைத்த பூரணத்தை சிறுது எடுத்து வைத்து மூடி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்படி செய்துவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லியை வேகவைப்பது போல் ஐந்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். 
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.

விநாயகர் சதுர்த்தி தேங்காய் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. தேங்காய் துருவல் - 1கப் 
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 1 ஸ்பூன் 
  7. எண்ணெய் - 1 ஸ்பூன்
  8. தண்ணீர் - 1 கப்
  9. பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைப்பட்டால் 
  10. பால் - 1 கரண்டி 
பூரணம் செய்முறை:
  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய், நெய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
கொழுக்கட்டை செய்முறை:
  1. பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கரண்டி பால், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
  2. கிளறிவைத்த அரிசி மாவை நன்றாகக் கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
  3. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
  4. இதன்மேல் செய்துவைத்த பூரணத்தை சிறுது எடுத்து வைத்து மூடி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்படி செய்துவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லியை வேகவைப்பது போல் ஐந்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். 
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.

Wednesday, 14 August 2013

இட்லி மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கடலை பருப்பு - 100 கிராம் 
  2. உளுந்து - 100 கிராம் 
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. பூண்டு - 5 பற்கள் 
  5. பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை 
  6. எண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காய தூள், கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  2. வறுத்ததை ஆறவைத்து பின் தேவையானாளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லி, தோசைக்கு இந்த தூளை தேவையான அளவு எடுத்து எண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி மிளகாய் தூள் தயார் !!!

சாம்பார் மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
  2. நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
  3. குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
  4. மஞ்சள் - 50 கிராம் 
  5. கடுகு - 100 கிராம் 
  6. மிளகு - 100 கிராம் 
  7. சீரகம் -100 கிராம் 
  8. வெந்தயம் - 25 கிராம் 
  9. கடலை பருப்பு - 100 கிராம் 
  10. சோயா பீன்ஸ் - 100 கிராம் 
  11. புழுங்கல் அரிசி - 100 கிராம் 
செய்முறை:
  1. கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்தெடுக்கவும் 
  2. பின் வறுத்த இவற்றோடு கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
சாம்பார் மிளகாய் தூள் தயார் !!!

பின்குறிப்பு:
  • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
  • இது அனைத்து விதமான சாம்பார், காரக்குழம்பு, வறுவல், பொறியல், மீன்குழம்பு, கறிக்குழம்பு போன்ற அனைத்து விதமான சமையலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
  • இந்த மிளகாய் தூளை மூன்று மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

Tuesday, 13 August 2013

சுண்டைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்:
  1. சுண்டைக்காய் - 200 கிராம் 
  2. வெங்காயம் - 200 கிராம் 
  3. தக்காளி - 200 கிராம் 
  4. பூண்டு - 10 பற்கள் 
  5. சாம்பார் மிளகாய்  தூள் - 2 ஸ்பூன் 
  6. புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு 
  7. வெல்லம் - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  8. எண்ணெய் - 100 கிராம்
  9. கடுகு - 1 ஸ்பூன் 
  10. வெந்தயம் - 1 ஸ்பூன் 
  11. கறிவேப்பில்லை - 2 கொத்து 
  12. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு 
  13. உப்பு - தேவையான அளவு 
  14. தண்ணீர் - ஒரு லிட்டர் 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  2. தக்காளியை பொடியாக நறுக்கி கையால் மசித்து வெங்காயம் வதங்கியவுடன் போடவும்.
  3. தக்காளி வதங்கிய பின் பூண்டை போடவும்.
  4. இரண்டாக நறுக்கிய சுண்டைக்காயை போட்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
  5. இப்பொழுது சாம்பார் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பிறகு தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
  7. மேலே எண்ணெய்  தானாக மிதந்து வரும் அளவுக்கு கொதிக்க விடவும்.
சுண்டைக்காய் குழம்பு தயார்  !!!

பின்குறிப்பு:
  1. சுண்டைக்காயை சமைப்பதற்கு முன் நிறம் மாறாமல் இருப்பதற்கு அதை இரண்டாக நறுக்கி தண்ணிரில் போட்டுவைக்கவும். 
  2. சாம்பார் மிளகாய் தூள்
      • கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
      • நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • மஞ்சள் - 50 கிராம் 
      • கடுகு - 100 கிராம் 
      • மிளகு - 100 கிராம் 
      • சீரகம் -100 கிராம் 
      • வெந்தயம் - 25 கிராம் 
      • கடலை பருப்பு - 100 கிராம் 
      • சோயா பீன்ஸ் - 100 கிராம் 
      • புழுங்கல் அரிசி - 100 கிராம் 
    • கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து பின் கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் இவற்ற்றோடு சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
    • மிளகாய் தூள் அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
    • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.

சமையல்

பொன்மொழிகள் - 23

  1. நம் வீட்டு விஷயங்களை நமக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி இருந்தாலே வாழ்வு இனிமையாகிவிடும்.
  2. தேச பக்தர்கள் பலரை பற்றி தெரிந்து கொள்ள "தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்" என்ற புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
  3. தோப்புக்கர்ணத்துக்கும் தலையில் குட்டிக் கொள்வதற்கும் அக்குபிரசர் முறையில் சில மருத்துவ நலன்கள் உண்டு.
  4. நம் மனதை நேரத்துக்குத் தகுந்தாற்போல் வளைத்து எதிர்வரும் இன்னல்களைச் சமாளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மனம் ஒடிந்து விபரீதமான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது.
  5. காலம் உயிர் போன்றது என்பதே உண்மை. உயிர் பிரிந்தால் எப்படி நமது உடலில் மீண்டும் சேராதோ அது போன்று காலத்தை இழந்தால் மீண்டும் அதை பெற இயலாது.
  6. பொருட்களை வாங்குவதற்கு எது அளிக்கப்படுகிறதோ அது எல்லோராலும் பணம் எனப்படும்.
  7. நாம் அறிய முடியாத காரணத்தைத்தான் ஊழ்வினை என்றும் முன்வினைப்பயன் என்றும் சொல்லபடுகிறது.
  8. எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு நாம் ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறோம்.
  9. இந்த உலகம் உயிருள்ளவர்களுக்கே சொந்தம். உயிர் உள்ளவர்கள் இந்த உலகை வெல்ல ஆசை பட வேண்டும்.
  10. வாழ்க்கையை வெறுப்பவர்கள் இறந்து போனவர்களுக்கு சமம் எனவே வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.

Thursday, 1 August 2013

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சுலோகங்கள்

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

***

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

***

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

***

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

***

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

***

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக்  கவலை தீருமே.

***

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

***

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

***

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். 

***

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

***

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.


***

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே.

***

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

***

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் 
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் 
நான்ற வாயும் நாலிரு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் 
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு(து) என்னை ஆட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க அறுத்துத் 
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 
குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறம்இது பொருளென 
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் 
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே 
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையில் இனிதெனக் கருளிக் 
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து 
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்திற வித்துக் 
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 
குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்து மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையம் 
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் 
என்முகமாக இனிதெனக் கருளிப் 
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் 
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி 
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன 
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தி என் செவியில் 
எல்லை இல்லா ஆனந் தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 
வேடமும் நீறும்  விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக! விநாயக! விரைகழல் சரணே!